Monday, April 16, 2007

மகிழ்ச்சியாகவாழ சில வழிகள்-2


மானிடத்தின் தேவை எதுவென்று நினைக்கிறீர்கள்? ''மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
மகிழ்ச்சி''! ஆமாம். மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைதானே வெற்றிகரமான
வாழ்க்கையாகும்.

அந்த மகிழ்ச்சியை மன நிறைவின் மூலம் நாம் உணர்கிறோம். அப்படியோர்
மனநிறைவைப் பெறுவதற்கான இந்த நான்கு குணங்களும் நமக்குள் வந்துவிட்டால்
நாம் முழுமையாக வெளிப்பட்டு நமது இலக்கை நிச்சயமாக எட்டமுடியும்.

மனிதநேயம்

ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் மொட்டுவிட்டிருக்கும் முதன்மையான இயல்பு இந்த
''நேயம்''. இந்த மொட்டானது மலர, மலர மனிதனின் வாழ்க்கையும் மலர்ந்து
மணம் வீசத் தொடங்கி விடுகிறது.

அதென்ன நேயம்? அன்பு, பாசம், கருணை, காதல் என்னும் சொற்களின் சாரம். இந்த
நேயமே மனிதர்களை இணைக்கிறது, பிணைக்கிறது, அரவணைக்கிறது, ஆற்றல்
தருகிறது, மன்னிக்கிறது, ஆறுதல் தருகிறது, ஊக்கம் தருகிறது,
உருவாக்குகிறது...

அப்படிப்பட்ட நேயமே மனித வாழ்வின் அடிப்படையும், அவசியமானதும்,
அற்புதமானதும், ஆக்கப்பூர்வமானதுமான குணமாகும். நேயம் மட்டும் மலராது
போனால், மனித குலமே வேரற்றுப் போகும். புகையும், பகையும், போரும்,
வெறுப்பும், விரக்தியுமே மிஞ்சும். சுயம் கெட்டு, சூழலும் கெட்டு மனித
இனம் பட்டுப் போகும். இந்தப் பிரபஞ்சமே இற்றுப்போகும்.

இந்தப் பிரபஞ்சம் என்னும் பெரும்பொருளே, ''நேயம்'' என்னும் அரும்
பொருளால் உருவானதே அன்றி வேறில்லை. கருணை வடிவான எதையும் நாம் கடவுளென்று
அழைப்பதும் அதனால்தான். நேயத்தின் கருப்பை தாய்மை. தாய்மையின்
பரிணாமந்தானே இந்த உயிரினம். அத்தனை அருங்குணங்களுக்கும் தலையாயது நேயமே
என்பதால் நேயத்தை நம் நெஞ்சின் அடித்தளமாக்குவோம்.

நேர்மை

நேர்மையானது வேறொன்றுமில்லை, அது நிஜமாய் இருப்பது. நம்பகத்தன்மையின்
மறுபெயரே நேர்மை. உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்வது அது. சரியாய்
முறையாய் நடப்பது. நேர்மை என்பது நேர் நிற்பதைக் குறிக்கிறது.

பேராசை கொள்பவர்கள் பொறாமைப்படுவார்கள், பொறாமைப்படுபவர்கள் சூழ்ச்சி
செய்வார்கள், குறுக்கு வழியில் செல்ல முயல்வார்கள், பொய் சொல்வார்கள்,
கோபப்படுவார்கள், குதர்க்கம் பேசுவார்கள், ஆரம்பத்தில் அவர்கள் காட்டில்
மழை பெய்யும். நாளடைவில் அத்தனையும் பொய்த்துவிடும். இது இயற்கையின்
நியதி. நேர்மை தொடக்கத்தில் கடினம். நேர்மையாய் நடக்கத் துணிவு
வேண்டும், மனதில் உறுதிவேண்டும், நாளடைவில் நேர்மையே வெல்லும். நெஞ்சில்
அமைதி குடிகொள்ளும்.

வாழ்க்கையானாலும், வர்த்தகமானாலும் அரசியலானாலும், சமூகமானாலும் ஒவ்வொரு
தனி மனிதனும் நேர்மையின் வழி நிற்கும்போது அவன் ஒரு தலைசிறந்த தலைவனாக,
பலரும் போற்றும் முன்னுதாரணமாகத் திகழ்வான் என்பது உறுதி. உலகின்
முன்னோடிகளெல்லாம் நேர்மையைக் கடைபிடித்து நெஞ்சு நிமிர வாழ்ந்தவர்களே!
என்பதுதான் வரலாற்று உண்மை. வரலாறுகளை நினைவில் கொள்வோம். வாழ்வில்
நேர்மை கொள்வோம். நாமும் வரலாறு படைப்போம்.

நேரம்

''மணி என்ன''? எனக் கேட்டு நமது மணிக்கட்டைத் திருப்பச் செய்யும்
பொழுதெல்லாம் நமக்கு உணர்த்துவது நேரத்தின் அருமையைத்தானே! ''நேரத்தை''
நறுக்குத் தெறித்தாற்போல் கூறுவது என்றால் அதை ''நமது வாழ்நாள்'' என்று
வரையறுப்பதுதான். நேரச் செலவு என்பது நமது வாழ்நாளின் செலவென்று உணர்வது
தானே பொருந்தும்.

செலவழிக்கப்பட்ட பணத்தை, செலவழிக்கப்பட்ட பொருளை மீண்டும் பெற்றுவிட
முடியும். ஆனால் செலவழிக்கப்பட்ட நேரத்தை நம்மால் திரும்பப் பெறமுடியுமா
என்ன?

''நேரத்தை மதித்தல்'' என்பது அரிய பண்பு, நேரத்தைப் போற்றுபவர்கள்
வெற்றி பெறுகிறார்கள், உடல் நலத்தோடு வாழ்கிறார்கள், அவர்கள் மன
உளைச்சலுக்கு ஆளாவதில்லை. காரணம் தெரியுமா? நேரத்தைப் போற்றுபவர்கள் ஏதோ
ஒரு இலக்கைக் குறித்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலக்கிருப்பதால்
அவர்களிடம் ஒரு திட்டமிருக்கிறது. திட்டமிருப்பதால் அவர்களிடம் முன்
உரிமைப் பட்டியலிருக்கிறது. முன்னுரிமைப் பட்டியல் என்பது நேர
நிர்வாகத்திற்கான அடிப்படையே அன்றி வேறில்லை.

அவர்களிடம் ''அலுவலக நேரம்'', ''வீட்டு நேரம்'', டி.வி நேரம்,
உடற்பயிற்சி நேரம், படிக்கும் நேரம், சந்தை நேரம், சிந்தை நேரம், எனப் பல
நேரங்கள் உண்டு. ஆமாம் அவர்கள் நேரத்தை நிர்வகிக்கிறார்கள். எனவே தமது
வாழ்க்கையை தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாமும் நம் நேரத்தின்
மீது கவனம் செலுத்தத் தொடங்கினால் வள்ளுவர் சொல்வது போல உலகையே
வெல்லலாம்.

''ஆடிப்பட்டம் தேடி விதை'' ''காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்''
என்பவையெல்லாம் ''ஒவ்வொரு செயலுக்கும் உரிய, உகந்த காலமென்று ஒன்று
உண்டு. அதனை உணர்ந்து செயல்பட்டால் எதிலும் வெல்லலாம்'' என்பதையே நமக்கு
எடுத்துரைக்கிறது. எனவே நாம் நமது காலத்தின் அருமையை உணர்வோம்,
காரியமாற்றுவோம், வெற்றி பெறுவோம்.

நேர்த்தி

எதையும் செய்து முடிக்கும் ஆற்றலை ''செய்திறன்'' என்கிறோம். சரியானதைத்
தேர்ந்தெடுத்து சரியான முறையில் செய்து முடிக்கும் முறைமையை
''செயல்நேர்த்தி'' என்கிறோம்.

''செய்வன திருந்தச் செய்'' என்கிறது தமிழ். ஆனால் நடைமுறையில், நாம்
செய்த செயலையே மீண்டும், மீண்டும் திரும்பச் செய்து காலத்தையும்,
மூலப்பொருள்களையும், மனித சக்தியையும் வீணடிக்கிறோம். ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொரு செயலையும் ஒழுங்காய் செய்வது என்பதையே நேர்த்தி என்கிறோம்.

''நேர்த்தி'' என்பது செய்யும் செயலை மட்டும் குறிக்காமல் செயல்முறையையும்
வலியுறுத்தி நிற்கிறது. செய்முறை என்பது அதில் ஈடுபடும் மக்களை எப்படிப்
பயன்படுத்துகிறோம் என்பதை பற்றியது. மக்களை ஈடுபடுத்தும் எந்தச்
செயலையும் முறையாகச் செய்ய வேண்டுமெனில், உரையாடும் கலை, ஊக்கமூட்டும்
முறை, பிறரை புரிந்து கொள்ளும் விதம் மற்றும் சிக்கலைத் தீர்த்து
வைக்கும் அணுகுமுறை என இத்தனையிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

அப்போதுதான் நேர்த்தியோடு நாம் நம் குடும்பத்தையோ, நிறுவனத்தையோ,
தொழிலையோ, அரசியலையோ, சமூக அமைப்பையோ நடத்த முடியும் என்பதுதான்
உளவியல்பூர்வமான நடைமுறை உண்மை. அப்படிச் செயல்படும்போது அதில்
ஈடுபட்டிருக்கும் அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும். அவர்கள் யாவரும்
ஒரே அணியாகச் செயல்படுவார்கள்.

இந்த அணுகுமுறையில் அடியெடுத்து வைத்து நேயம்கொண்டு, நேர்மை கொண்டு,
நேரம் பேணி, நேர்த்தி காண்போம்! நம் வாழ்க்கையை மகிழ்ச்சியால்
நிரப்புவோம்.

(நன்றி:சிஃபி தமிழ்)

1 comment:

Raviraj said...

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி.
ரவிராஜ்